இந்தியாவில் கரோனா பரவலைத் தொடர்ந்து, அவசர காலம் அல்லது பேரிடர்களை சமாளிக்கும் வகையில் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை பிரதமர் மோடியால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அதன் வெளிப்படைத்தன்மை குறித்த விவகாரத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.
கிண்டல் அடித்த ராகுல் காந்தி
அறக்கட்டளை அரசு அமைப்பா அல்லது தனியார் அமைப்பா என்ற தெளிவு அரசுக்கே இல்லை என்பது குறித்த செய்தியை பகிர்ந்த ராகுல் காந்தி, பிஎம் கேர்ஸ் - வெளிப்படைத்தன்மைக்கு வணக்கம் என கிண்டல் அடித்துள்ளார். டெல்லி வருவாய் துறையிடம் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவராக பிரதமர் மோடியும் உறுப்பினர்களாக மூத்த அமைச்சர்களும் உள்ளனர். இருப்பினும், அது ஒரு அரசு அறக்கட்டளை என அதன் ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.
அறக்கட்டளையின் முக்கிய ஆவணம்
அறக்கட்டளையின் 5.3ஆம் பத்தியில், "அரசின் கீழோ, கட்டுப்பாட்டிலோ, அரசின் நிதி உதவியாலோ அல்லது அரசின் அமைப்புகளின் உதவியாலோ பிஎம் கேர்ஸ் நிதி இயங்கவில்லை. அறக்கட்டளையின் செயல்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையின் ஆவணத்தில், அது ஒரு தனியார் அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.