சூரத்: மோடி குறித்த அவதூறு பேச்சு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என இன்று (மார்ச் 23) தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. எனினும் சில நிமிடங்களில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், லலித் மோடி, நீரவ் மோடி உள்ளிட்டோரை குறிப்பிட்டு "எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர்" என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி, அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்றது. மோடி என்ற பெயரை குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஒட்டு மொத்த சமூகத்தையும் இழிவுபடுத்திவிட்டதாக புனரேஷ் மோடி வாதாடினார். பூபேந்திர பேடேல் அமைச்சரவையில் பங்கேற்றிருந்த புனரேஷ் தற்போது சூரத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.
வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென மனுதாரர் தனியாக ஒரு மனுவை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் வழக்கின் விசாரணை தடை பட்டது. உயர்நீதிமன்ற தடை நீங்கிய பிறகு இரு தரப்பு வாதங்களும் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இன்று (மார்ச் 23) தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின் போது, ராகுல்காந்தியின் பேச்சு அடங்கிய எலக்ட்ரானிக் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தியின் வழக்கறிஞர். பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து பேசியதால், பிரதமர் தான் வழக்கு தொடர வேண்டுமே தவிர, எம்எல்ஏ புனரேஷ் மோடி இவ்வழக்கை தொடர முடியாது என வாதிட்டார்.
வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில் விமானத்தில் சூரத் சென்ற ராகுல்காந்தி அங்கிருந்து நேரடியாக நீதிமன்றம் சென்றார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அவரை விமான நிலையத்திலேயே வரவேற்றனர். நீதிமன்றம் செல்லும் வழி நெடுக காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இவ்வழக்கில் ராகுல் காந்தி இதுவரை 3 முறை ஆஜராகியுள்ளார்.
இன்று இறுதி தீர்ப்பளித்த நீதிபதி எச்எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு அளித்தார். மேலும் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி எச்எச் வர்மா தீர்ப்பு வழங்கினார். அதேநேரம் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் 15 அயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்துமாறு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று துவக்கம் - ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேறுமா?