ஜாலவார் (ராஜஸ்தான்): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்.9 அன்று நாடு முழுவதுமான இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.
இப்பயணம் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்து நேற்று (டிச.4) ராஜஸ்தானிற்குள் நுழைந்தது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலம் என்பதால் அங்கு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில முதலமைச்சர் அசோக் கெலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா ஆகியோர் ராகுல் காந்தியை வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மத்திய பிரதேசத்தில் 12 நாட்களாக 380 கி.மீ இந்த நடைபயணம் நேற்று (டிச.4) ராஜஸ்தானின் ஜாலவார் மாவட்டத்தை அடைந்தது. ராகுலை வரவேற்றபோது மாநில முதலமைச்சர் அசொக் கெலட், சச்சின் பைலட், கோவிந்த் சிங் ஆகியோருடன் இணைந்து ராஜஸ்தான் நாட்டுப்புற இசைக்கு கை கோர்த்து நடனமாடினர். முன்னதாக சனிக்கிழமை(நவ.3) ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அவரது டிவிட்டரில் பதிவிட்ட வீடியோவில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அனைவரையும் வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பாஜகவிற்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். அசோக் கெலட்டிற்கும் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கு இடையே பல பிரச்சனைகள் இருந்தாலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டது காங்கிரஸ் தொண்டர்களை மகிழ்வித்தது.
காங்கிரஸ் காந்தியின் கட்சி: வரவேற்பு ஏற்பாடுகளை தொடர்ந்து ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் கூறுகையில், ‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. இருப்பினும் அவர்களை நாட்டில் வளர விடக்கூடாது. இந்த ஒற்றுமை நடைபயணத்தில் சிறந்த பாடம் ஒன்றை கற்று வருகிறேன். விமானம், ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்த பயணத்தில் விவசாயிகளின் கைகளை குலுக்கும் போது நான் தெரிந்து கொண்டேன்.
நாட்டிற்கு நல்லது புரியாத இந்த மத்திய அரசானது 3-4 தொழிலதிபர்களின் பயன்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. இந்த பயணத்தில் வரும் ஒவ்வொரு தொண்டரும் அதிகாலை 5 மணிக்கு சாலைகளில் இறங்கி விடுவார்கள். ஏனென்றால் இது மகாத்மா காந்தியின் கட்சி சாவர்க்கரின் கட்சியோ அல்லது கோட்சேவின் கட்சியோ அல்ல’ எனத் தெரிவித்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார் எனவும், நாட்டின் முக்கிய பிரச்சனைகளை காங்கிரஸ் எம்பிக்கள் பேசுவார்கள் என காங்கிராஸ் எம்பி வேனுகோபால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:குஜராத் தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி