பெங்களூரு : உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் ஸ்ரீ சிவக்குமார சுவாமிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். தொடர்ந்து இருவரும் கட்சி கூட்டங்களிலும் கலந்துகொள்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (ஏப்.1) மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்த ராமையா, மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
தொடர்ந்து ராகுல் காந்தி பெங்களூருவில் உள்ள கேபிசிசி அரங்கத்தில் சனிக்கிழமை (ஏப்.2) உரையாற்றுகிறார். இந்நிகழ்வின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை (மார்ச் 31) கர்நாடகா செல்கிறார். தொடர்ந்து, நந்தினி க்ஷீரா அபிவிருத்தி வங்கி (பால் வளர்ச்சி வங்கி) மற்றும் யஷஸ்வினி திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு மற்றும் பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்கிறார்.
தொடர்ந்து, அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு பெங்களூரு செல்கிறார். வெள்ளிக்கிழமை (ஏப்.1) காலை 10.55 மணிக்கு துமகூரு வரும் ஷா, சித்தகங்கா மடத்தைச் சேர்ந்த மறைந்த ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் 115ஆவது பிறந்தநாள் மற்றும் குரு வந்தன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு சிக்கபல்லாபுராவுக்குச் செல்வார். பிற்பகல் 2 மணிக்கு முத்தேனஹள்ளியில் மருத்துவக் கல்லூரி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்கிறார். தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
ஸ்ரீ சிவக்குமார சுவாமிகள் 2019ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் என அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். கர்நாடக மாநிலத்தில் வரும் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்!