பாட்னா: பிகாரின் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ரஃபீக் அட்னான் (30) என்பவர் அதிகளவு உணவு உண்ணும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது உடல் பருமன் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அவரது உடல் எடை 200 கிலோவாக இருக்கிறது. இந்த அதிக எடை அவரது ஆரோக்கியத்தையும், திருமண வாழ்க்கையையும் பாதித்துவிட்டது. ரஃபீக்கின் எடை சாதாரண மோட்டார் சைக்கிள்களால் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டதால் புல்லட்டில் பயணிப்பதாக தெரிவிக்கிறார். அதோடு எடை காரணமாக உள்ளூர் மக்களின் ஏளனத்தையும் ரஃபீக் எதிர்கொள்கிறார்.
இதுகுறித்து ரஃபீக் கூறுகையில், "ஒரு நாளைக்கு 3 கிலோ அரிசி, 4 கிலோ ரொட்டி, 2 கிலோ கோழி, ஒன்றரை கிலோ மீன், மூன்று லிட்டர் பால் என மொத்தம் 14 முதல் 15 கிலோ வரை உணவு சாப்பிடுகிறேன். சிறுவயதிலிருந்தே இந்த கோளாறு இருக்கிறது. தற்போது எடை மிகவும் அதிகரித்துவிட்டது.
இதனால் நடப்பதில்கூட பிரச்சினை. எனக்கு திருமணமான போதும், உடல் எடை காரணமாக குழந்தை பிறக்கவில்லை. சிகிச்சை அளித்தால் நலமாகி விடுவேன் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மருந்துகள் எடுத்தபோதும் எனது உடல்நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை" என்று கூறினார்.
ரஃபீக்கின் நண்பர் சல்மான் கூறுகையில், "சில வருடங்களுக்கு முன்பு வரை அவரது எடை சற்று கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அது மிகவும் அதிகரித்துவிட்டது. அவருக்கு உணவு கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் அவரால் சாப்பிடாமலும் இருக்க முடிவதில்லை என்று தெரிவித்தார்.
ரஃபீக்கின் உடல்நிலை குறித்து பேசிய உள்ளூர் மருத்துவர் மிருணாள் ரஞ்சன், "ரஃபீக் புலிமியா நெர்வோசா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் மீண்டும் மீண்டும் அதிக அளவில் சாப்பிடுகிறார். இது ஒரு வகையான உணவுக் கோளாறு" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் கேரளாவின் அதிசயக் குடும்பம்!