டேராடூன்: உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும் பெருவாரியான இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. உத்தரகாண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 இடங்களை வென்று அக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு பேசிய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பாஜக அரசு ஆட்சியமைத்த உடனே தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல, பொது சிவில் சட்ட மசோதாவை கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ளார்.
கட்டுக்கதைகள் கட்டுடைக்கப்பட்டன
மேலும் கூறிய அவர், "உத்தரகாண்டில் பாஜக ஒருமுறை ஆட்சியமைத்தால், காங்கிரஸ் அடுத்தமுறை ஆட்சியமைக்கும் என்ற வழக்கத்தை உடைத்துள்ளோம். இதுபோல உள்ள அனைத்து கட்டுக்கதைகளையும் நரேந்திர மோடி பிரதமரான பின்னர் உடைத்துள்ளார. கட்டுக்கதைகளை பொய்யாக்கி புதிய வரலாற்றைப் படைத்துள்ளோம்.
சட்ட மசோதைவை வடிவமைக்க உயர்மட்ட குழு ஒன்று உடனே அமைக்கப்படும். அந்த மசோதாவை பேரவையில் நிறைவேற்றுவோம்.
உத்தரகாண்ட் இந்தியாவின் ஆன்மீக ஆன்மா
இரண்டு முக்கிய வெளிநாடுகளின் எல்லைகளை கொண்டுள்ள உத்தரகாண்டில் இந்த சட்டத்தை அமல்படுத்துவது என்பது மிக முக்கியமானது. இங்கு பாதுகாப்பு படையினர் பலரும் வசிக்கின்றனர். இது நாட்டின் ஆன்மாவின், ஆன்மீக உறைவிடமாகவும் திகழ்கிறது. எனவே, இந்த மண்ணில் அனைவருக்கும் பொதுவான சட்டம் இருப்பதே சரியானது. அதனால்தான், இதை நிறைவேற்ற வேண்டும் என்கிறோம்" என்றார்.
பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தான் போட்டியிட்ட ஹதிமா தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உ.பி.யின் 36 ஆண்டுகால தேர்தல் வரலாற்றை மாற்றிய யோகி!