டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி பெரும் வன்முறை சம்பவமாக வெடித்தது. செங்கோட்டைக்கு சென்ற போராட்டக்காரர்கள், கம்பத்தில் ஏறி கால்சா எனும் சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். இதையடுத்து, துணை ராணுவ படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், செங்கோட்டையில் விவசாயிகள் கொடி ஏற்றியதை நடிகர் தீப் சிங் சித்து பேஸ்புக் செயலியில் நேரலை செய்தார். அந்தப் பதிவில், "நாங்கள் நிஷான் சாஹிப் கொடியை தான் செங்கோட்டையில் ஏற்றியுள்ளோம். போராடுவதற்கான ஜனநாயக உரிமை அனைவருக்கும் உள்ளது எனப் பதிவிட்டிருந்தார். வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் தீப் சிங் சித்து நேரலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி, தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, விவசாயப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களில் சிலர், தேசவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாக சந்தேகித்த என்ஐஏ, விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிர்சா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.