பஞ்சாப்: நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று, அம்மாநில முதலமைச்சராக பகவந்த் மாண் நேற்று (மார்ச் 16) பதவியேற்றார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் பதவியேற்ற மறுநாளே (மார்ச் 17) பஞ்சாப் மாநில மக்களுக்கு பகவந்த் மாண் அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. முதலமைச்சர் பகவந்த் மாண் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பகத் சிங் நினைவு நாளில் ஊழலுக்கு எதிராகப் புகார் அளிக்க பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்படும். அது என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும்.
யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் அதை வீடியோ/ஆடியோவாகப் பதிவு செய்து உதவி எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். ஊழல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் இல்லாத பஞ்சாபை உருவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பகவந்த் மான் இன்று காலையில் சஸ்பென்ஸ் வைத்து ட்வீட் செய்திருந்தார். அதில், "இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிக்க உள்ளேன். பஞ்சாப் வரலாற்றில் இதுவரை யாரும் இதுபோன்ற முடிவை எடுத்ததில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு சஸ்பென்ஸை முடித்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: புனிதமான சட்டப்பேரவையில் மாதவிடாய் விடுமுறை குறித்துப் பேசுவதா? - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப்பேச்சு