பஞ்சாப்: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த மாநிலங்களில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
117 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தநிலையில், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அதில், "ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜெயந்தி பிப்ரவரி 16, 2022 அன்று வருகிறது. அவரைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்துவதற்காக பிப்ரவரி 10 முதல் 16ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸூக்கு புனிதப் பயணம் மேற்கொள்வர்.
இதில் பட்டியல் இனமக்கள் பெரும்பாலானோர் பயணம் செய்வதால், அவர்கள் வாக்கு செலுத்த முடியாத நிலை ஏற்படும். மாநிலத்தில் 32 விழுக்காடு மக்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களும் வாக்கு செலுத்தவேண்டும். அதனால் வாக்குப்பதிவு தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், பல்வேறு கட்சித் தலைவர்களும் குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இன்று(ஜன.17) இந்திய தேர்தல் ஆணையம் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தேதியை பிப்ரவரி 14ஆம் தேதிக்குப் பதிலாக பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றி அறிவித்தது.
புதிய அறிவிப்பின்படி,
வாக்குப்பதிவு நாள் - பிப்ரவரி 20
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - பிப்ரவரி 1
வேட்புமனு பரிசீலனை - பிப்ரவரி 2
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் - பிப்ரவரி 4
வாக்கு எண்ணிக்கை - மார்ச் 10
இதையும் படிங்க: பஞ்சாப் ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிப்பு!