பஞ்சாப் : ஜலந்தர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றார். ஜலந்தர் தொகுதி, ஏறத்தாழ 24 ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த நிலையில், முதல்முறையாக ஆம் ஆத்மி வேட்பாளர் அங்கு வெற்றி பெற்று உள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சன்டோக் சிங் சவுத்ரி, கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், ஜலந்தர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகத் தேர்தலை போல், ஜலந்தர் தொகுதியிலும் கடந்த மே 10ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தொடக்கம் முதலே ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு முன்னிலை வகித்தார். இறுதியில் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அவர் 3 லட்சத்து 2 ஆயிரத்து 279 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய முன்னாள் எம்.பி. சன்டோக் சிங் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுர் 2 லட்சத்து 58 ஆயிரத்து 445 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
பாஜக வேட்பாளர் இக்பால் சிங் அத்வால் 3வது இடத்தையும், ஷிரோமணி அகாலி தல் வேட்பாளர் ஷுக்விந்தர் குமார் ஷுகி 4வது இடத்தையும் பிடித்தனர். 19 வேட்பாளர்கள் தேர்தல் களத்தை எதிர்கொண்டனர்.
அதேபோல் ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜு ஜனதா தள பெண் வேட்பாளர் திபாலி தாஸ் வெற்றி பெற்றார். ஜார்சுகுடா தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான நபா கிஷோர் தாஸ் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அந்த தொகுதியில் நபா கிஷோர் தாசின் மகள் திபாலி தாஸ் வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று (மே. 13) முடிவுகள் வெளியானது. 48 ஆயிரத்து 721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அரசியலுக்கு புதிதானவர் எனக் கூறப்பட்டாலும் தந்தை இறந்த அனுதாப அலை திபாலி தாஸ் வெற்றி பெற அனுகூலமாக இருந்தது எனக் கூறப்படுகிறது.
பாஜக வேட்பாளர் ஒட்டுமொத்தமாக 58 ஆயிரத்து 477 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியைத் தழுவினார். அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் 4 ஆயிரத்து 496 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேர்தல் வெற்றி குறித்து பேசிய பிஜூ ஜனதா தள துணைத் தலைவர் தேபி பிரசாத் மிஸ்ரா, முன்னாள் சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மரணம் தொடர்பாக எதிர்க் கட்சியான பாஜக நாடகம் ஆடியதாகவும், ஆனால் ஜார்சுகுடா மக்கள் தீபாலி தாசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் கூறினார்.
முன்னாள் ஜார்சுகுடா எம்.எல்.ஏ.வும், சுகாதாரத் துறை அமைச்சருமான நபா கிஷோர் தாஸ் தனது தொகுதியை அனைத்து துறைகளிலும் வளர்த்து வந்தார் என்றும் இப்போது அவரது மகள் தீபாலி தாஸ் அந்த பணியை தொட்ர்ந்து மக்களுக்காக சேவை செய்வார் என்றும் தேபி பிரசாத் மிஸ்ரா, கூறினார்.
இதையும் படிங்க : பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு தோல்வி - தேர்தல் வியூகத்தை மாற்றுமா பாஜக!