புதுச்சேரி போக்குவரத்து செயலர் அசோக்குமார், அத்துறை அலுவலர்கள் இன்று (ஜன. 28) தலைமைச் செயலர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய செயலர், “மோட்டார் வாகனங்கள் திருத்தச்சட்டம் 2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் முக்கிய குறிக்கோள் குற்றங்களுக்கான ஆதாரங்கள் அதிகரிப்பது, மோட்டார் வாகன விதிகளை அதிகளவில் பின்பற்றுவதை உறுதிசெய்வதாகும்.
திருத்தப்பட்ட அபராதங்கள் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த போதிலும் புதுச்சேரி அரசாங்கத்தின் அமலாக்க அலுவலர்கள், அபராதம் கூட்டவும், அபராதம் வசூலிக்கவும் முடியவில்லை. எனவே அபராதம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை” என்றார்.
இது தற்போது புதிய அபராத கட்டணமாக முதல் முறை குற்றத்திற்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும் இரண்டாவது முறை, அதற்கு மேல் குற்றத்திற்கு ரூபாய் 500 முதல் 1000 ரூபாய் வரை புதிய அபராத கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நான்கு சக்கர வாகனத்தில் இருக்கை பெல்ட் அணியாமல் அமர்ந்து இருப்பவருக்கு குற்றத்திற்கு ரூபாய் 100 இருந்தது. தற்போது புதிதாக ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல் தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்தால் ரூபாய் ஆயிரமும், மூன்று மாதத்திற்கு ஓட்டுநர் உரிமை தடை செய்யப்படும் என்று திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அபராத கட்டணத்தை அவர் வெளியிட்டார். மேலும் பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.