புதுச்சேரி: தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதனை புதுச்சேரி மாநில பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளருமான தினேஷ் குண்டுராவ் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், புதுச்சேரிக்கு முழ மாநில அந்தஸ்து பெறப்படும், புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் பெற்ற அனைத்து கடன்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரியை 15ஆவது நிதி கமிஷனில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 60ஜிபி டேட்டா ஒவ்வொரு மாதத்திற்கு இலவசமாக வழங்கப்படும். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மானவர்களுக்கும் இலவச மடிக்கணி அளிக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதியோர், விதவைகளுக்கு தற்போது வழங்கப்படும் தொகையை விட 5000 ருபாய் மாதப்படியாக உயர்த்தி அளிக்கப்படும். ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் மாதம் 1000 ருபாய் அளிக்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம் 5000 அளிக்கப்படும். புதுச்சேரியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா, பின்னலாடை பூங்கா அமைக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் கட்டணமில்லா குடிநீர் இணைப்பு அளிக்கப்படும்.
புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும். புதுச்சேரியில் சட்ட பல்கலைக்கழகம் கொண்டு வரப்படும். மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். கரோனா தடுப்பூசி செலவை அரசே ஏற்கும். காரைக்காலில் விவசாய பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்.
ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும். புதுச்சேரி அரசு பணியாளர் பணிக்கு தேர்வு ஆணையம் அமைக்கப்படும். மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் வீரப்பமொய்லி, முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி, . வைத்திலிங்கம எம்.பி ஆகியோர் உடனிருந்தனர்.