புதுச்சேரி: கோடை விடுமுறைக்குப் பின் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (ஜூன் 23) பள்ளிகள் திறக்கப்பட்டன. 11ஆம் வகுப்பு தவிர, மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்புகள், எழுதுபொருட்கள் கொடுத்து வரவேற்றனர்.
லாஸ்பேட்டை கோலப்பர் அரங்கசாமி அரசுப்பள்ளியில் தோரணம் கட்டி, மாணவர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீருடை அணிந்து முக மலர்ச்சியுடன் வந்த மாணவர்களுக்கு பூ, பலூன் கொடுத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் நகரின் முக்கியப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதுச்சேரி உப்பளம் பகுதியில் ஒரே சாலையில் 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், முக்கியப் பகுதிகளில் போக்குவரத்தைச் சீர்செய்ய குறைந்த அளவிலேயே காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இதனிடையே இன்றும், நாளையும்(ஜூன் 24) அரசு மற்றும் அரசு சார்பு பள்ளிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என்றும்; கரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சியில் 'காலை உணவு வங்கி' திட்டம்!