புதுச்சேரி: மருத்துவக் கல்லூரி மாணவர் மயக்கமுற்று திடீரென உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் , வெஸ்டன் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் குடி மெட்லா சிரஞ்சீவி ரெட்டி. இவரது மகன் குடி மெட்லா சங்கல்ப் ரெட்டி. இவர் புதுச்சேரி லட்சுமிநாராயணன் தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி மருத்துவம் படித்து வந்த இவர், நேற்று புதுச்சேரி கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்று காலை சக மாணவர்கள் சாப்பிடுவதற்கு அழைத்துள்ளனர். அப்போது தனக்கு இருமல் வருவதால் சாப்பிட வரவில்லை எனவும், மயக்கமாக வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மயக்க நிலையில் இருந்த அவரை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சக மாணவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவர் மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: T23 புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு