சென்னை: புதுச்சேரியில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகளில் குளறுபடிகள் உள்ளதாக கூறி, முத்தியால்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி நீதிபதி, ஆதிகேசவலு அமர்வில் நேற்று(அக்.4) விசாரணைக்கு வந்தது.
வழக்கு ஒத்திவைப்பு
அப்போது, கூடுதல் சொலிஸ்சிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, “வழக்கு நிலுவையில் இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது, வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது இல்லை என்பதால், அக்டோபர் 21 நடத்தவுள்ள தேர்தலை தள்ளிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை அக்டோபர் ஏழாம் தேதி தள்ளிவைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் வேட்புமனு பெறுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று(அக்.5) ஒத்தி வைத்திருந்தனர்.
விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்
இந்நிலையில் வழக்கு இன்று(அக்.5) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசு சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணை திரும்பப் பெறுவதாக புதுச்சேரி தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், புதிய அறிவிப்பாணை வெளியிட புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் அனுமதி கேட்டுள்ளது, உடனே வார்டு குளறுபடிகளை சரிசெய்து புதிய தேர்தல் அறிவிப்பாணை விரைவில் வெளியிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, புதிய அறிவிப்பாணை வெளியிட அனுமதி அளித்து வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்த சிங்கப்பூர் தூதர்