புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடந்த சில நாள்களாக பரப்புரை மேற்கொண்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தியை ஆதரித்து அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும், மத்திய அரசின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவ்வாறு எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. பாஜக தேர்தல் அறிக்கை உப்பு சப்பு இல்லாத தேர்தல் அறிக்கையாக உள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் கல்வி, மருத்துவம், சமூக நலத் திட்டம் முதலியவற்றில் முதலிடம் பெற்றுவந்தது. ஆனால் புதுச்சேரி வளர்ச்சி இல்லாத மாநிலம் போல் எதிர்க்கட்சியினர் பேசிவருகின்றனர். பலமுறை புதுச்சேரிக்கு நிதிக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து உள்ளேன்.
ஆனால் நான் சந்திக்கவில்லை என அவர் பொய் பரப்புரை செய்துவருகிறார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.