புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் விவசாயி ஸ்ரீலட்சுமி. இவர், ஆரஞ்சு கொய்யா, பன்னீர் கொய்யா என பல்வேறு வகை கெய்யா பழங்களை விளைவித்து விற்பனை செய்து வருகிறார். மேலும், இவர் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமாக தரமான அதிக லாபம் தரக்கூடிய வேளாண் பயிர்களை உருவாக்கி வருகிறார்.
அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலட்சுமியின் தந்தை வேளாண் விஞ்ஞானி பத்மஸ்ரீ வெங்கடபதி உடன் சேர்ந்து புதியவகையான அதிக லாபம் தரக்கூடிய சவுக்கு மரக்கன்றை கண்டுப்பிடித்தார். இந்த சவுக்கு மரத்துக்கு ஸ்ரீலட்சுமி 'மோடி 1' என பெயரிட்டுள்ளார். இந்த ரக சவுக்கு மரத்தை ஸ்ரீலட்சுமி கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் கண்டுப்பிடித்துள்ளார்.
ஸ்ரீலட்சுமியின் 'மோடி 1' ரக சவுக்கு மரக்கன்றை ஹைதராபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு மையம் அங்கீகரித்துள்ளது. மேலும், அவரைப் பாரட்டும் விதமாக மத்திய அரசு ரூ. 5 லட்சம் நிதியுதவியும் வழங்கியுள்ளது.
கரரோனா காலத்தில் விவசாயம் செய்ய அவதிப்படும் விவசாயிகள், இது போன்ற அதிக சாகுபடி தரக்கூடிய சவுக்கை பயிரிட வேண்டும் என ஸ்ரீலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார். சாதா சவுக்கை ஒரு ஏக்கருக்கு 40 டன் சாகுபடி தருகிறது என்றால் 'மோடி 1' சவுக்கு 150 டன் வரை சாகுபடி தருவதாகவும், ஐந்தரை ஆண்டுகள் இதனை சாகுபடி செய்து நல்ல லாபம் பெற முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
இது குறித்து மேலும் ஸ்ரீலட்சுமி கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் வணிக நிலங்களாக மாறி வருகின்றன. இக்கால நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் கற்றுக்கொண்டால்தான் விவசாயத்தில் நீடிக்க முடியும். விவசாயத்திற்கு தண்ணீர் தான் மிக பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது. இதிலிருந்து தப்பிக்க 'மோடி 1' சவுக்கை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டமுடியும் என்றார்.