புதுச்சேரியில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, 'பாஜகவின் தொழில் தேர்தலில் நின்று வெற்றி பெறுவதில்லை. குறைந்த இடத்தில் வெற்றிபெற்று பிற கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பதுதான், பாஜகவின் வேலை. புதுச்சேரி உட்பட பல மாநிலங்களில் செய்தது மகாராஷ்டிராவில் முடியவில்லை.
சிவசேனா கட்சியினரிடம் இந்த வேலை நடக்கவில்லை. கட்சி மாறியவர்களை அவர்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள். இந்த நிலை புதுச்சேரியிலும் வரவேண்டும். மகாராஷ்டிராவில் பாஜகவால் ஆட்சி மாற்றம் கொண்டு வர முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்ரே வெற்றி பெறுவார். கட்சி மாறி ஓடும் நிலை பாஜகவிற்கும் வரும். அப்போதுதான் அந்த வழி மோடிக்கும் அமித்ஷாவிற்கும் தெரியும்' என்று தெரிவித்தார்.
மேலும் அவர், 'யூனியன் பிரதேசமாக இருந்தாலும் புதுச்சேரி, அனைத்து அதிகாரங்களும் பெற்றுள்ளது. ஆனால், அதனையும் மீறி, நில விவகாரத்தை கையாள துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொது சொத்துகளை தனியாருக்கு விற்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தனது அதிகாரத்தை ஆளுநரிடம் ரங்கசாமி கொடுத்து டம்மி முதலமைச்சராகி விட்டார். தமிழிசை சூப்பர் முதலமைச்சராகி விட்டார். புதுச்சேரியில் சொத்தை கபளீகரம் செய்ய விடமாட்டோம் என்றார்.
குடுகுடுப்பைக்காரனைப் போல "நல்ல காலம் பிறக்கிறது..நல்ல காலம் பிறக்கிறது" என துணைநிலை ஆளுநர் தமிழிசை அடிக்கடி கூறி வருகிறார்; ஆனால், எந்த திட்டமும் புதுச்சேரிக்கு வரவில்லை. செயல்படாத அரசு தான் புதுச்சேரியில் நடக்கிறது' எனப் புகார் கூறிய அவர், 'தமிழிசைக்கு தெலங்கானாவில் வேலை இல்லையா..? ஏன் புதுச்சேரியில் டேரா போட்டுக் கிடக்கிறார்..? புதுச்சேரிக்கு ஏன் நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமிக்கவில்லை’ என்றும் நாராயணசாமி கேள்விகளை எழுப்பினார்.
’புதுச்சேரியில் பிராந்தி கடைகள் திறப்பிற்கு பல லட்சம் கை மாறியுள்ளது. இதேபோல், மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுப்பதில் பல கோடி பேரம் நடக்கிறது. இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது. ஆட்சியாளர்கள் மறுக்க முடியுமா..?’ என நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அக்னிபத் திட்டம் பாஜக செய்த சதி' - நாராயணசாமி