புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, என்.ரங்கசாமி, கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து, கடந்த 21ஆம் தேதி தற்காலிக பேரவைத் தலைவராக என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் க.லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (மே.26), காலை 9.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவராக லட்சுமி நாராயணன் பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து 10 மணிக்கு, சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. அப்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள், நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் என சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் அறைக்கு இரண்டு எம்எல்ஏக்கள் வீதம் அழைக்கப்பட்டு, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி எளிமையான முறையில் பதவியேற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குக் கோப்புகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி சென்றார். அதில், கரோனா நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 3,000 ரூபாய் வழங்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக ஒப்புதல் அளித்ததையடுத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், தலா 3,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.