புதுச்சேரி சட்டப்பேரவையை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 30பேர், நியமன சட்டப்பேரவை உறுப்பினர் 3 பேர் என முறையே 33 பேர் இருப்பார்கள். இந்நிலையில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் பாகூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து, மல்லாடி கிருஷ்ணாராவும் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார் இன்று (பிப்.16) தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
தொடர்ச்சியாக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்து வருவது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ’எங்களை பொறுத்தவரை காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது. காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கின்றனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களின் கோரிக்கை நியாயமானது அல்ல.
எதிர்க்கட்சிகளின் பலத்தை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்களுடைய கூட்டணி பலமாக இருக்கிறது. எங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்ற காரணத்தால், எந்த அளவிற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க:'நாராயணசாமி தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்' - ரங்கசாமி வலியுறுத்தல்