புதுச்சேரி : காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதனிடையே கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக புதுச்சேரி சிறைத்துறை, அரவிந்தர் சொசைட்டி என்ற சமூக அமைப்புடன் இணைந்து கைதிகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்தல், யோகா போன்ற பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் தண்டணைக் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வெளியே செல்லும்போது அவர்கள் சொந்த தொழில் செய்யும் வகையில் புதிய திட்டத்தை சிறைத்துறை கொண்டு வந்துள்ளது. அதன்படி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் கைதிகள் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப்பண்ணை அமைத்து அன்னாசி, வாழை, மஞ்சள் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும் இது ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை என்பதால், அங்கு ஆடு, மாடு, கோழி, முயல் ஆகியவற்றையும் வளர்த்து வருகின்றனர். விவசாயப் பணியில் ஈடுபடும் தண்டனைக் கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பளம் கொடுக்கப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் விவசாயப் பொருட்களை, புதுச்சேரி சந்தைகளில் விற்பனை செய்ய சிறைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க : அரசு அலுவலகங்களில் ஆண்கள் ஓப்பி அடிப்பார்கள் - எம்.எல்.ஏ சர்ச்சைப்பேச்சு!