புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக ஆலோசனைக் கூட்டம், தலைமைக் கழகத்தில் இன்று கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்திற்குப் பின் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் அதிமுக கட்டுபாட்டு இயக்கமாக செயல்பட்டு வருகிறது. அரசியலில் இருந்து விலகுவதாக கூறிய சசிகலா, தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இதனை புதுச்சேரி அதிமுக கண்டிக்கிறது.
இந்த தவறான போக்கை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளுக்கு புதுச்சேரி அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும். தேர்தலோடு அதிமுக அழியும் என சசிகலா நினைத்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகும் அதிமுக வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால் கட்சியை கைப்பற்ற சசிகலா முயற்சிக்கிறார்" என்று அவர் கூறினார்.
மாநில அவைத்தலைவர் பரசுராமன், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் , தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அனைவருக்கும் தடுப்பூசிபோட நடவடிக்கை - ஈரோடு மாவட்ட ஆட்சியர்