புதுச்சேரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி நேற்று முன்தினம் (ஜூன் 10) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "ஆளுநர்களுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இரு ஐஏஎஸ் அலுவர்களுக்கு மாத ஊதியமாக மொத்தம் ரூ.2.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உதவியாளர்களாக வேறு அரசுத் துறையில் இருந்த நான்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் ஆளுநர் ஆலோசகர்கள் தங்க, அரசு இல்லம் ரூ.14. 65 லட்சத்தில் செலவு செய்து சரிசெய்து தரப்பட்டுள்ளது. அரசு நிதி வீணடிக்கப்பட்டள்ளது" என்றார்.
இதற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், "புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள் தங்குவதற்கு அரசினர் விருந்தினர் இல்ல சீரமைப்பு பணிகளுக்காக பெருமளவு தொகை செலவு செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை அறிந்து, அதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் உரிய விசாரணை நடத்தி முழுமையான விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமைச் செயலாளருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த லடாக் செல்லும் ராணுவத் தளபதி