ஜம்மு: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி மீதான ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தன் மீதான ஒரு வழக்கிலாவது, தான் குற்றம் செய்ததை நிரூபித்துக் காட்டுங்கள் என்றும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளைச் சந்திக்க தயார் எனவும் மெகபூபா முஃப்தி சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், " பண மோசடி உள்ளிட்ட பல புகார்களில் என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது தந்தையின் கல்லறை குறித்து சிலர் தணிக்கை செய்து வருவது அருவருப்பாகவுள்ளது.
என்னுடைய ஆட்சி காலத்தில், ஜம்மு காஷ்மீர் வங்கியில் முறைகேடு நடந்ததாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். என் மீதான ஒரு வழக்கிலாவது நான் செய்த குற்றத்தை நிரூபித்துக்காட்டட்டும். அதன் பின்விளைவுகளை சந்திக்கத் தயார்.
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக எனது கட்சியின் இளைஞரணித் தலைவர் வாஹித் பாரா தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். என் மீதான முறைகேடு புகார்களை நிரூபிக்க முடியாத காரணத்தால், தற்போது இந்த பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் எனக்கு தொடர்பு இருப்பதாக சிலர் கூறுகின்றனர்" என்றார்.
ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து மெகபூபாவிற்கு ஆதரவு திரட்டியதாக, வாஹித் பாரா கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ம.பி. அமைச்சரவை விரிவாக்கம்: சிந்தியா ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி