டெல்லி: கைது செய்யப்பட்டு 50 மணிநேரத்திற்கு பிறகு, ராகுல் காந்தி, பிற காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் பிரியங்கா காந்தி தற்போது லக்கிம்பூர் நோக்கி சென்றுகொண்டுள்ளார். இந்தக் குழு, வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற லக்கிம்பூருக்கு விரைந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழில் அதிபருமான ராபர்ட் வதேரா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
கைது செய்தது தவறு
அப்போது அவர் பேசுகையில், " லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவிக்கவே கடந்த ஞாயிற்றுகிழமை (அக். 3) அன்று பிரியங்கா காந்தி லக்னோ சென்றார். என்னிடம் பேசியபோது, அங்கு மழை பெய்து வருவதாகவும், மூன்று மணி நேரத்தில் லக்கிம்பூரை அடைந்துவிடுவேன் எனவும் கூறினார்.
சிறிதுநேரத்தில், அவரை காவலர்கள் அராஜமாக கைது செய்த காணொலியை பார்த்தேன். இதனால், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அவரை லக்கிம்பூர் செல்ல அனுமதித்திருந்தால், பிரச்சினையின் சூழலே மாறியிருக்கும்.
அரசின் சர்வாதிகாரம்
பிரியங்கா சுத்தமில்லாத ஒரு அறையில் சிறை வைக்கப்பட்டார். மேலும், அவரது அறை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, இணையமும் முடக்கப்பட்டிருக்கிறது.
அதன்பின்னர், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. தற்போது, அவர் விடுவிக்கப்பட்டார் என்றும், ராகுல் சீதாப்பூர் சென்றுவிட்டார் என்றும் எனக்கு தகவல் வந்தது. ஆனால், பிரியங்கா அங்கு மேற்கொள்ள வேண்டிய பணியை நிறைவேற்றிய பின்னரே வீடு திரும்புவார்.
ஒரு அரசியல்வாதிக்கு எதிராக அரசு நிர்வாகம் இப்படிப்பட்ட அராஜக செயலை மேற்கொள்ள முடியுமானால், சாதாரண மக்களின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள் என்று பலரும் தங்களது கவலை வெளிப்படுத்தினர்.
எங்கள் போராட்டம் தொடரும்
அமைச்சர் அஜய் மிஸ்ராவோ அல்லது அவரது மகன் மீதோ தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எல்லாம் இல்லை, அரசு சர்வாதிகாரத்தை திணிப்பதைதான் இது காட்டுகிறது.
எனது குடும்பம் நிச்சயமாக விவசாயிகளுடனும், ஒடுக்கப்படும் மக்களுடனும் பிற பிரிவினருடனும் நிற்கும். அவர்கள் எங்களை தடுக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம்" என கூறியுள்ளார்.
முன்னதாக, ராபர்ட் வதேரோ லக்னோ செல்ல விமான நிலையத்திற்குச் சென்றபோது அங்கு தன்னை அனுமதிக்கவில்லை என்றும் ஒரு கணவனாக மனைவியை நேரில் சென்று பார்த்து உதவி செய்ய முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என இன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி தர்ணா - லக்னோ விமான நிலையத்தில் பரபரப்பு