அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தனது பரப்புரையை தொடங்கியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முதல் நாளான இன்று புகழ்பெற்ற காமாக்யா கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார்.
பிரியங்கா காந்தி, அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஜித்தேந்திர சிங் ஆகியோர் லோக்ரியோ கோபிநாத் போர்டோலோய் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். மாநில தலைவர் ரிபுன் போரா மற்றும் பல தலைவர்கள் அவர்களை வரவேற்றனர். நிலாச்சல் மலை உச்சிக்கு செல்வதற்கு முன்பு, ஜலுக்பாரி பகுதியில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, "நானும், எனது குடும்பத்தினரும், அஸ்ஸாம் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். வழிபாடு செய்யவும், அனைத்தும் அளித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவும் கோயிலுக்கு வந்துள்ளேன்" என தெரிவித்தார்.