டெல்லி: ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மனத்தின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது 74ஆவது மனத்தின் குரல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது மக்களிடம் பேசிய அவர், "மக்கள் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் தயாரிக்கும் பொருள்களால் பெருமைகொள்கின்றனர். மக்களின் எழுச்சியால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியுள்ளது" என்றார்.
மேலும், "உலகின் மிகவும் தொன்மையான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது தமக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழ் மொழியின் இலக்கிய வளம் மிகவும் அற்புதமானது. அதனைக் கற்க பலமுறை முயன்றும் முடியாமல் போனது" என வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நீராதாரங்களைப் பாதுகாத்தல், கரோனா வைரசுக்கு (தீநுண்மி) எதிரான தொடர் போராட்டம், வேலைவாய்ப்பு ஆகியவை குறித்தும் உரையாற்றினார்.
வெகுவிரைவில் கோடைகாலம் வரவுள்ளதால், ஜல்சக்தி (நீர் ஆற்றல்) அமைச்சகத்தின் மூலம் மழைநீரைச் சேமிப்பது தொடர்பான விழிப்புணர்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.