பதாமி : பெங்களூருவில் ரோட் ஷோ சென்ற போது மக்கள் அளித்த உற்சாக வரவேற்பு, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் மக்கள் தான் போட்டியிட்டு உள்ளது போல் நினைவுபடுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு கர்நாடகத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. சட்டமன்றத்தேர்தலுக்கு மூன்று நாட்கள் மட்டும் உள்ளதால் தேர்தல் களம் அனல் பறந்து காட்சி அளிக்கிறது.
மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் அதிதீவிரம் காட்டி வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தொடர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூருவில் பிரதமர் மோடி இரண்டு நாட்களாக தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்று பிரதமர் மோடி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்திற்காக வரும் பிரதமர் மோடிக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பெங்களூருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சாலை ஊர்வலத்தின் போது தனக்கு கிடைத்த அமோக வரவேற்பு, கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள் போட்டியிடுவது போன்று உணர்த்தியதாக கூறினார். மேலும் பெங்களுரு மக்கள் இதுவரை பார்த்திராத அளவில் அன்பையும், பாசத்தையும் வாரி வழங்குவதாகவும் அவர்களின் அன்பு இணையற்றது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஊர்வலத்தின் போது சாலையின் இருபுறமும் மாற்றுத்திறனாளிகள், புதிதாக பிறந்த குழந்தைகளுடன் பெண்கள் உள்ளிட்டோர் நின்றதாக கூறினார். தான் பார்த்தவரையில் பெங்களூருவில் தானோ, பாஜக தலைவர்களோ அல்லது வேட்பாளர்களோ போட்டியிடவில்லை என்றும் கர்நாடக மக்கள் தான் பாஜக சார்பில் போட்டியிடுவது போன்று இருந்ததாகவும் என்று கூறினார்.
பாஜகவின் இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கம் பாரபட்சமின்றி வளர்ச்சியைக் கொண்டு வருவதில் செயல்பட்டு வருவதாகவும், பாகல்கோட் மக்களுக்கு மூன்று லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் பாகல்கோட்டைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களுக்கு சொந்தமாக சிமென்ட் வீடு கட்டித் தரப்பட்டு உள்ளதாகவும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் பாகல்கோட் மக்களைச் சென்றடைந்தது உள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி செய்வதால் தான், மக்கள் பயனடைந்து உள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மக்களை விட்டுவிட்டு காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதை உணர்ந்து சென்றுவிட்டார் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 85 சதவீத கமிஷன் கிடைத்துள்ளதாகவும், அவர்களால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்றும் மோடி கூறினார். காங்கிரஸின் தவறான செயல்களால், இந்தியா பல ஆண்டுகளாக பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பின்தங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா மிகப்பெரிய செல்போன் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளதாகவும், ஒரு காலத்தில் இந்தியாவில் இரண்டு செல்போன் தொழிற்சாலைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது நாடு 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க : Karnataka election : "கர்நாடகாவுக்கு யாருடைய ஆசீர்வாதமும் தேவையில்லை" - சோனியா காந்தி பளீச்!