விசாகப்பட்டினம்: முப்படைகளின் தலைமை தளபதியான குடியரசு தலைவர் தனது பதவிக்காலத்தில் ஒருமுறை கடற்படை ஆய்வு நிகழ்வை நடத்த வேண்டும். அந்த வகையில் இன்று(பிப்.21) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை கப்பல்களை ஆய்வு செய்ய உள்ளார்.
இந்த நிகழ்வில், இந்திய கடலோர காவல்படை, இந்திய வர்த்தக கப்பல்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்பட இந்திய கடற்படையைச் சேர்ந்த 60 கப்பல்கள், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் கலந்து கொள்கின்றன.
இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், இந்த நிகழ்வானது நாட்டின் சேவையில் இந்திய கடற்படையின் 75 ஆண்டுகள் பங்கு என்னும் கருத்தை மையமாக கொண்டு நடைபெறுகிறது.
இந்தாண்டு நிகழ்வில் தூர்தர்ஷன் பல்வேறு புதுமைகளுடன் இந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்யவுள்ளது. 30 ட்ரோன் கேமராக்கள், தரையிலும், கடலிலும் அமைக்கப்பட்ட பல்முனை கேமராக்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதில் நிலத்திலும், கடலிலும் காட்சிகளை துல்லியமாக காட்டும் உயர்தொழில்நுட்ப லென்சுகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்தப் பிரம்மாண்டமான நிகழ்ச்சியை ஒளி, ஒலிபரப்ப ஏராளமான முன்னேற்பாடுகளை தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் செய்துள்ளன.
இதையும் படிங்க: கோவிட் பெருந்தொற்றை இந்தியா எதிர்கொண்ட விதம் பெருமைளிக்கிறது - குடியரசுத் தலைவர் உரை