டெல்லி: சமூக மற்றும் கல்விரீதியாக பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எவை என்பதைக் கண்டறியும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது, மாநில அரசுகளுக்கு இல்லை என கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாக ஒன்றிய அரசும் தெரிவித்தது.
இதனிடையே, சமூகம் மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பட்டியலைத் தயார் செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கே திரும்ப அளிக்க 127ஆவது அரசியல் சாசன சட்டதிருத்த மசோதாவை மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
பெகாசஸ், வேளாண் மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே, ஆகஸ்ட் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஆக.20) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஓபிசி பிரிவினருக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி 127ஆவது சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் ஓபிசி பட்டியலைத் தயாரிக்கலாம்.
இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு: 127ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்!