டெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இன்று (நவம்பர் 20) வலது கண்புரை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையை பிரிக் எஸ்கே மிஸ்ரா தலைமையிலானா மருத்துவக் குழு செய்துமுடித்தது. அதன்பின் முர்மு மருத்துவமனையிலிருந்து குடியரசு தலைவர் மாளிகைக்கு திரும்பினார். திரௌபதி முர்மு இரண்டு கண்களிலும் கண்புரை நோய் காரணமாக அவதிப்பட்டுவந்தார்.
அதன்காரணமாக அவருக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. அந்த வகையில், இடது கண்ணில் அக்டோபர் 16ஆம் தேதி கண்புரை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அதன்பின் சில நாள்கள் ஓய்வில் இருந்தார். அதைதொடர்ந்து இன்று வலது கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கத்தாரில் நடக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை தொடக்க விழாவில் கலந்துகொள்வதாக இருந்தது. இந்த சிகிச்சை காரணமாக அவருக்கு பதிலாக துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் 2 நாள் பயணமாக இன்று கத்தாருக்கு புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: 74ஆவது நாளாக மகாராஷ்டிராவில் ராகுல் யாத்திரை - படங்கள் வைரல்