டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் உரையை தொடங்கினார். அப்போது அவர், "2047ஆம் ஆண்டுக்குள் கடந்த காலத்தின் பெருமையுடன் புதிய தேசத்தை உருவாக்க வேண்டும். தற்சார்பையும் மனிதாபிமான கடமைகளையும் நிறைவேற்றும் நாட்டை உருவாக்க வேண்டும்.
இந்தியா தன்னம்பிக்கையின் உச்சத்தில் உள்ளது. ஆகவே, வறுமையில்லாத நாடகா இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கமும் செழிப்பாக இருக்க வேண்டும். நாட்டிற்கு வழி காட்ட இளைஞர்களும், பெண்களும் முன் நிற்க வேண்டும். இந்தியா உலக நாடுகளுக்கு தீர்வுகளை வழங்கி வருகிறது.
நாட்டில் ஒரு நிலையான, அச்சமற்ற மற்றும் தீர்க்கமான அரசாங்கம் உள்ளது. அந்த அரசாங்கம் பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து முதல் முத்தலாக் ஒழிப்பு வரை வரலாற்று முடிவுகளை எடுத்துள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
ஏழைக் குடும்பங்கள் பலனைப் பெறுகின்றன. 100 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடிக்கு எதிராகவும் சூழ்நிலைகளை சமாளித்தும் வந்த உறுதியான அரசாங்கங்களின் பலன் எங்களால் அறுவடை செய்யப்படுகிறது. உலகின் எந்த நாடுகளில் சமமற்ற அரசியல் நிலவுகிறதோ, அந்த நாடுகள் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கின்றன.
ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறந்த விளங்குகிறது. ஜனநாயகத்துக்கும், சமூக நீதிக்கும் ஊழல் மிகப்பெரிய எதிரி என்பதை எனது அரசாங்கம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளது. கோடிக்கணக்கில் கடன் பெற்று தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.
ரூ.27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கோடிக்கணக்கான மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் வழங்கியுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் கரோனா காலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள கோடிக்கணக்கான மக்களை காப்பாற்ற முடிந்தது.
கரோனா காலத்தில், ஏழைகள் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை நாம் பார்த்தோம். எந்த ஏழையும் வெறும் வயிற்றில் தூங்கக்கூடாது என்பதை நோக்கி முயற்சிகள் எடுத்துவரும் நாடுகளில் நம் நாடும் ஒன்று. எனது அரசாங்கம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் அதிகாரத்தை கட்டியெழுப்பியுள்ளது.
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எளிதில் சென்றடைவதால், அவர்களால் புதிய கனவுகளைக் காண முடிகிறது. எனத் தெரிவித்தார். எனது அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே முக்கிய அம்சமாக உள்ளது. பெண்களின் ஆரோக்கியமும் முன்பை விட மேம்பட்டுள்ளது.
புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டம் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் அயோத்தி கோயில் உருவாக்கப்படுகிறது.
மறுபுறம் நவீன நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கேதார்நாத் கோயிலின் மறுவடிவமைப்பு மற்றும் காசி விஸ்வநாத் கோயிலின் மஹாகல் திட்டம் ஆகியவை முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இன்று நமது இளைஞர்கள் புதுமையின் ஆற்றலை உலக அரங்கில் வெளிப்படுத்துகின்றனர். புதிய முயற்சிகளால், நமது பாதுகாப்பு ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் வடிவிலான முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலும் இன்று நமது கடற்படையில் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தாண்டு ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது.
அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து, உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார். முன்னதாக நாடாளுமன்றம் வந்தடைந்த திரௌபதி முர்முவை பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றனர்.
இதையும் படிங்க: இந்தியா முதலில், குடிமகன் முதலில் - பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் மோடி