டெல்லி: நாட்டின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26-ல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். 74-வது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
அரசியலமைப்பை நிறுவியவர்கள் தங்களுக்கு என வரைபடம் மற்றும் தார்மீக கட்டமைப்பை வழங்கி உள்ளதாகவும், அந்த பாதையில் நடக்கும் பொறுப்பு உள்ளதாகவும் கூறினார். இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவுக்கு தலைமை தாங்கியது மற்றும் அரசியலமைப்பு இறுதி வடிவம் பெற உறுதுணையாக இருந்த அண்ணல் அம்பேத்கருக்கு நாடு நன்றிக் கடன் பட்டிருப்பதாக கூறினார்.
அதேநேரம் அரசியலமைப்புக்கு தொடக்க உரை எழுதிய நீதிபதி பி.என்.ராவ் மற்றும் அரசியலமைப்பு தயாரிப்பு குழுவில் இருந்த நிபுணர்கள் உள்ளிட்டோரையும் நாடு இந்த நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டு இருப்பதாகவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களிடையே தெரிவித்தார்.
பல்வேறு விதமான மதங்களும், மொழிகளும் நம்மைப் பிளவுபடுத்தவில்லை, மாறாக ஒன்றிணைத்துள்ளன என்றார். உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களில் ஒன்று இந்தியா என்றும்; அம்பேத்கர் உள்ளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளதாகவும் அரசின் செயல்பாடுகளால் இது சாத்தியமானதாகவும் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையில் கல்வி செயல்முறையை விரிவுபடுத்துவதிலும், ஆழப்படுத்துவதிலும் தொழில்நுட்பம் முக்கியப்பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
தேசிய கல்விக்கொள்கையில் லட்சிய மாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளதாகவும் ககன்யான் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். ககன்யான் திட்டம் மூலம் நிலவில் இந்தியர்கள் கால்பதிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும், நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்று நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிபிசி சர்ச்சை ஆவணப்படம் ஒளிபரப்பு - எஸ்.எப்.ஐ மாணவர்கள் கைது.. போராட்டம்..