பெங்களூரு: தென் மாநிலத்தை உலுக்கிய மகப்பேறுக்கு முற்பட்ட பாலின நிர்ணயம் மற்றும் பெண் சிசுக்கொலை மோசடி வழக்கில் இரண்டு மருத்துவர்கள் உட்பட 5 பேரைப் பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் துளசிராம், மைசூரைச் சேர்ந்த மருத்துவர் சந்தன் பல்லால் மற்றும் அவரது மனைவி மீனா, மைசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் வரவேற்பாளர் ரிஸ்மா, லேப் டெக்னீசியன் நிசார் ஆகியோர் நேற்று (நவ.25) பெங்களூரு, பையப்பனஹள்ளி காவல் துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் செய்து ஆண் குழந்தைகளா? பெண் குழந்தைகளா? என்ற பாலினத்தை நிர்ணயம் செய்து மாதம் தோறும் 20 முதல் 25 கர்ப்பிணிகளுக்குக் கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது.
சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் பெங்களூரு, மாண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் இரண்டு ஆண்டுகளாகச் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் பாலின நிர்ணயம் (குழந்தை ஆணா? அல்லது பெண்ணா?) மற்றும் கருக்கலைப்புக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.
கருக்கலைப்பு சம்பந்தமாகக் கடந்த அக்டோபர் மாதம் ஷிவனஞ்சே கவுடா, வீரேஷ், நவீன் குமார் மற்றும் நயன் குமார் ஆகிய 4 பேர் கருக்கலைப்பிற்காகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச் சென்ற போது பையப்பனஹள்ளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது.
இதனையடுத்து பையப்பனஹள்ளி காவலர் கூறும் போது, "பெண் குழந்தைகள் பெற விரும்பாத கர்ப்பிணிப் பெண்களை மாண்டியாவில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று கருவில் பெண் குழந்தை இருப்பது தெரிய வந்தால் கருவைக் கலைத்து விடுவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த கும்பல் 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் செய்து ஒவ்வொரு மாதமும் குறைந்தது 20 முதல் 25 கருக்களைக் கலைத்துள்ளனர். தற்போது நேற்று (நவ.25) இந்த வழக்கில் 2 மருத்துவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சட்டவிரோத செயல்களுக்காகக் கட்டமைப்பு உருவாக்கிக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மைசூர் உதயகிரியிலுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ராஜ்குமார் சாலையிலுள்ள ஆயுர்வேத பராமரிப்பு மையம் ஆகியவை காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விதான் சவுதா பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கூறும் போது, "இந்த வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
கருத்தரிப்பான பெண்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பு குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதைத் தெரிவிப்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டால் பாலினத் தேர்வுத் தடைச் சட்டம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உத்தர பிரதேசத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. பள்ளி ஆசிரியர் மீது வழக்கு!