புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (டிச.10) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இத்திட்டதின் மூலம் மத்திய, மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியினை அளிக்கவுள்ளனர். இதில் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் 90 நாட்களுக்கு தையல், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சி நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கு மதிய உணவு, உதவித்தொகை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதனை ஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வண்ணம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.