ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையின் பதவிக்காலம், இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ளது.
சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல், இந்த ஆண்டின் இறுதிவாக்கில் நடைபெற உள்ளது. இன்னும் இதற்கான தேதியை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், வாக்காளர்களுக்கு இலவசங்கள் அளிப்பது குறித்த கோதாவில், ஆம் ஆத்மி விரைந்து களமிறங்கி உள்ளது.
இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகை, வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, பள்ளி மாணவர்களுக்கு தரமான இலவச கல்வி, மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா உள்ளிட்ட 10 இலவச அறிவிப்புகளை, ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
முதலமைச்சர் பூபேஷ் பாகேல், நாட்டின் 77வது சுதந்திர தினத்தை ஒட்டி ஆற்றிய உரை, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலேயே அமைந்து இருந்தது. பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்ளுக்கான நுழைவுத் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், பள்ளி, கல்லூரி மாண்வர்களுக்கு இலவச பேருந்து பயணம், 60 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 1500 மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள், முதலமைச்சரின் உரையில் இடம்பெற்று இருந்தன.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, மக்களுக்கு மானிய விலையில் தானியங்கள், இலவச மிதிவண்டிகள், லேப்டாப்கள், மொபைல் போன்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருந்ததாக தெரிவித்து உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் ஊடக பிரிவு தலைவர் அமித் சிம்னானி கூறியதாவது, ஆம் ஆத்மி கட்சியால், தங்களது கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் தான் போட்டியே இருக்கும். காங்கிரஸ் கட்சி, சட்டீஸ்கர் மக்களை கடுமையாக ஏமாற்றி உள்ளது. மின் கட்டணத்தை 5 மடங்கு அளவிற்கு உயர்த்தி, மக்களை சொல்லெணா துயரத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காங்கிரஸ் அரசு அளித்த மானியத்தை விட, மக்களிடம் இருந்து அதிக அளவிலான பணத்தை வசூலித்து உள்ளது. மக்களுக்கு தேவையான திட்டங்களை மட்டுமே, பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தி வருவதால், மக்களிடையே அந்த திட்டங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக, அவர் தெரிவித்து உள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் ஊடக செய்தித் தொடர்பாளர் தனஞ்ஜெய் சிங் தாகூர் கூறியதாவது, பாரதிய ஜனதா கட்சி, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால், அது ஏன் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. எந்த ஒரு வாக்குறுதியையும் அந்த கட்சி நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கட்சி அளித்த 36 வாக்குறுதிகளில் 34 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் நரேந்திர மோடி தொடர்ந்து ஏமாற்றி வருவதாக, அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் காரிய கமிட்டியில் அதிரடி மாற்றம் - சசி தரூர், சச்சின் பைலட் சேர்ப்பு!