ஹைதராபாத்: 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் 138 கோடி மக்கள் வசிக்கும் நாடு இந்தியா. இந்த பரந்த புவிப் பரப்பு கொண்ட ஒரு நாட்டில் நடக்கும் ஒவ்வொரு குற்றமும் உடனடியாகக் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவற்றிற்கு பொருத்தமான தண்டனையை முடிந்தளவு விரைவாகப் பெற்றுத் தரும் வேளையிலேயே நாட்டின் சமூக அமைதி என்பது சாத்தியமாகிறது.
குற்றவாளிகளுக்கு எல்லைகளும், வரம்புகளும் கிடையாது. அவர்கள் எவ்வித தடையுமின்றி தங்களது எண்ணங்களை நிறைவேற்ற முடிகிறது. ஆனால், காவல்துறையினர் விதிகளுக்கு கட்டுப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது.
இவர்களது இந்தக் கவலையைப் போக்க உதவுகிறது குற்றம், குற்றவாளிகளை கண்டறியும் தொடர்பு அமைப்பு (crime and criminal tracking network system CCTNS). இவை காவல்துறையினர் குற்ற நடவடிக்கைகளில் விரைந்து பணியாற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி காவல்துறை வரலாற்றில் மிகச் சிறந்த வளர்ச்சியாகவும் இது தெரியப்படுகிறது.
இவை குற்றவாளிகளின் கைரேகைகள் உள்ளிட்ட தகவல்களை சேமித்து வைப்பதுடன், நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் ஒன்றிணைத்து வழங்குகிறது. அனைத்து காவல் நிலையங்களும் குற்றவாளிகளின் தரவுகளை இதன் மூலம் சேமித்து வைப்பதால் அவர்களை நாட்டின் மூலை முடுக்கிலும் கண்டறிவது எளிதாக உள்ளது.
சுணக்கம் காட்டும் காவல் நிலையங்கள்
இருப்பினும், நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் ஒன்றோடு ஒன்று இணைக்கும் பணியானது மிகவும் சுணக்கமாக நடைபெறுகிறது. இந்த சி.சி.டி.என்.எஸ் முறையும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின்படி, நாட்டில் 95 விழுக்காடு காவல் நிலையங்கள் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. சுமார் 14 ஆயிரத்து 500 காவல் நிலையங்கள் அவற்றின் வரம்புகளில் நிகழும் அனைத்து குற்றங்களையும் அதற்கான காரணங்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் இதன் மூலம் சேமித்து வருகின்றனர்.
விரைவான விசாரணை மற்றும் வலுவான தண்டனைகளுக்கு காவல் துறையினரிடம் தகவல் பரிமாற்றம் அவசியமாகிறது. அதனால்தான் குற்றம் மற்றும் குற்றவியல் தகவல் அமைப்பு (Crime and Criminal Information System CCIS) நீண்ட நாள்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறை தலைமையகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களுடனே முடக்கப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறது உள்துறை அமைச்சகம்?
மத்திய உள்துறை அமைச்சகம் காவல் நிலையங்களை இணைக்கும் பணி நிறைவடைந்து வருகிறது. இதற்காக 5.6 லட்சம் பணியாளர்களுக்கு மென்பொருள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களை பதிவேற்றுவதில் மாநிலங்களுக்கிடையே வேறுபாடு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் மேற்கூறிய விவரங்களை பதிவு செய்வதில் சிறப்பாக செயல்படுகின்றன. ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி முறையை அமல்படுத்துவதிலும் அவர்கள் முன்னணியில் உள்ளனர். பீகார் போன்ற மாநிலங்களில், 5 விழுக்காடு காவல் நிலையங்கள் மட்டுமே இந்த முறைகளைப் பயன்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தங்களது குற்ற சம்பவத்தின் வடிவங்களை புதிய தொழில்நுட்பங்களின் மூலமும் செயல்படுத்தி முன்னேறிச் செல்கின்றனர். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இணைய திருட்டுகள் அதிகரித்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் மட்டும் சைபர் கிரைம்களில் பறிபோன தொகையின் அளவு ரூ .1.25 லட்சம் கோடியைத் தாண்டியது.
கரோனா தொற்றுநோய் காலங்களின்போது சைபர் கிரைம்களின் தீவிரம் இன்னும் மோசமடைந்துள்ளது. குற்றவாளிகளின் தரவுகளை சேமித்து வைக்காத மாநிலங்களில் விசாரணையின் வேகம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இது குற்றச் செயல்களை அதிகரிக்கவே வழிவகுக்கும்.
நாடு முழுவதும் சிறைச்சாலைகள், நீதித்துறை அலுவலர்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு இடையில் தகவல் பகிர்வு மற்றும் ஒருங்கிணைப்பு இருக்கும்போதே குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் விரைந்து குற்ற சம்பவங்களுக்கு நீதியை வழங்கவும் முடியும்.