பாட்னா: ரயிலில் வெடி பொருட்கள், புகை பிடிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் பீகாரில் ரயிலில் இருந்து 20 கிலோ வெடி மருந்தை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
குவாலியரில் இருந்து பாருனி விரைவு ரயிலில் வெடிமருந்து கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், குவாலியர் விரைவு ரயில் சிவான் ரயில் நிலைய சுற்றுவட்டாரத்தில் இருப்பதை உறுதி செய்தனர்.
சிவான் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை மடக்கிய போலீசார், சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு, தடய அறிவியல் நிபுணர்கள் குழு ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்தன. தொடர்ந்து நடந்த சோதனையில் ரயிலில் இருந்த 20 கிலோ வெடி மருந்தை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு குழுவில் இருந்த அதிகாரி கூறுகையில், விரைவு ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்து அது கொண்டு வந்த ரயில் மற்றும் ஒரு ரயில் நிலையத்தை தகர்க்க போதுமானது என்று தெரிவித்தார். சரியான நேரத்தில் கிடைத்த தகவலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.
ரயில் நிலைய பாதுகாப்பு சோதனை என எல்லாவற்றையும் தாண்டி இந்த வெடி மருந்து எப்படி ரயிலுக்குள் வந்தது என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்து உள்ளது. ரயில்வே ஊழியர்கள் யாரும் இந்த சம்பவத்தில் தொடர்பில் உள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடத்தில் ஈடுபட்ட நபர் குறித்த எந்த தகவலும் இல்லை எனக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், கடின ஆயுதங்கள், புகை பிடிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த கடத்தல் சம்பவம் ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முசாபர்பூர் அடுத்த மிதான்புரா பகுதியில் வாடகை வீட்டில் இருந்த வெடி பொருட்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை பீகார் போலீசார் விசாரித்து வந்த நிலையில், பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தொடர் கைது நடவடிக்கை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், வெடி பொருட்கள் ரயில் மூலம் மாநிலத்திற்குள் கடத்தி வரப்பட்டதை கண்டுபிடித்தனர். பீகாரில் அடுத்தடுத்து வெடி பொருட்கள் பறிமுதல் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போலீசாருக்கு போக்கு காட்டும் அம்ரித்பால் சிங்: அடைக்கலம் கொடுத்த பெண் கைது!