புனே: மகாராஸ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ தக்காளியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விவசாயி அருண் தோம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொழிலாளர்கள் உதவியுடன் தனது தோட்டத்தில் இருந்து தக்காளி அறுவடை செய்துள்ளார்.
இந்த தக்காளிகளை பெட்டிகளில் அடுக்கி, வாகனம் மூலம் ஷிரூர் தாலுகாவில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அடுத்தநாள் தக்காளிகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த அவருக்கு காலையில் எழுந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீட்டில் வைத்திருந்த தக்காளி பெட்டிகளில் 400 கிலோ எடையுள்ள 20 பெட்டிகள் மட்டும் திருடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருண் தோம், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இதன் மூலம் தனக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தக்காளி திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழித்து ரூ.6ஆயிரத்தை இழந்த நபர்! நடந்தது என்ன தெரியுமா?
தங்கம் விலை உயர்வதுபோல் நாளுக்கு நாள் தக்காளி விலை சரமாரியாக உயர்ந்த நிலையில் ஒரு கிலோ தக்காளி கடைகளில் 200 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், பணம், நகை உள்ளிட்ட விலை மதிப்பற்ற பொருட்கள் மீது இருந்த பார்வையை திருடர்கள் தக்காளி பக்கம் திருப்பியுள்ளனர். மகாராஷ்டிரா மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளி திருட்டு அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
பெரிய பெரிய திருட்டுகளை எல்லாம் கண்டு பிடித்த காவலர்கள் தற்போது தக்காளி திருட்டை கண்டுபிடிக்கும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க மறுபுறம், புனே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி சமீபத்தில் 18 ஆயிரம் தக்காளி பெட்டிகளை 3 கோடி ரூபாயிக்கு விற்பனை செய்து தேசிய செய்திகளில் இடம்பிடித்து வைரலானார்.
வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தக்காளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளி திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Manipur video: 4 பேர் கைது - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க அரசு பரிசீலனை