அமராவதி: ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ள இன்று (மார்ச் 1) திருப்பதி செல்வதற்காக ஹைதராபாத்திலிருந்து திருப்பதி விமான நிலையத்திற்கு வந்தார்.
அங்கு காவல் துறையினர் அவரைத் திருப்பதி செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் வரவேற்பு அறையின் தரையில் அமர்ந்து திடீரென சந்திரபாபு நாயுடு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து சந்திரபாபு நாயுடு காவல் துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஏன் திருப்பதி மற்றும் சித்தூருக்குச் செல்வதைத் தடுக்கிறார்கள் என்று கேள்வியெழுப்பினார்.
"நான் 14 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்துள்ளேன், இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன். எதிர்ப்புத் தெரிவிக்க எனக்கு உரிமை இல்லையா? நான் ஏன் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்க முடியாது" என்றும் வினவினார்.
எவ்வாறாயினும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான நடத்தை விதிமுறை, கரோனா பாதிப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி காவல் துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
முன்னதாக திருப்பதி, சித்தூர் காவல் துறையினர் சந்திரபாபு நாயுடு வருகைக்கு முன்னதாக, மாவட்டத்தின் முக்கியத் தெலுங்கு தேச கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.