பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த 17ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மின்னஞ்சலை பள்ளி ஆசிரியர்கள் அடுத்த நாள் பார்த்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், மோப்பநாய்கள் மற்றும் பாம் ஸ்குவாட் ஆகியோருடன் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டுகள் ஏதும் இல்லை. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன்தான் அந்த மின்னஞ்சலை அனுப்பினான் என்பது தெரியவந்தது.
பொதுத்தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தேர்வுக்கு சரியாக தயாராகாமல், மாணவன் அச்சத்தில் இருந்ததாகவும், அதனால் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. சினிமா நடிகரின் பெயரில் புதிதாக மின்னஞ்சலை உருவாக்கி, தனது தந்தையின் கணினியில் இருந்து பள்ளிக்கு மின்னஞ்சலை அனுப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.
மாணவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட தனியார் பள்ளி கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் போராடத்தூண்டியவர் கைது!