சோலாபூர்: ரைஸ் புல்லிங் இயந்திரத்திற்கு அதிக தட்டுப்பாடு இருப்பதாகவும், அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட நாசா ஆராய்ச்சியாளர்கள் இந்தியா வர உள்ளதாகவும் கூறி பொது மக்களிடம் இருந்து 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டு அமைப்பு என போலியாக தொடங்கிய நபர், தொழில்முனைவோர் மற்றும் பொது மக்களுக்கு முதலீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதாக போலி முகாம்களை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரைஸ் புல்லிங் இயந்திரத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், தட்டுப்பாடு காரணமாக இயந்திரத்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும் கூறி நபர் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக கலந்தாய்வு கூட்டத்தை நடத்திய நபர், கூட்டத்திற்கு வந்த பொது மக்களிடம், ரைஸ் புல்லிங் இயந்திரம் தொடர்பாக பல்வேறு கட்டுக் கதைகளை அள்ளிவிட்டும், அதில் முதலீடு செய்தால் நல்ல வருவாய் ஈட்டலாம் என பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியதாக சொல்லப்படுகிறது.
மேலும் ரைஸ் புல்லிங் தொடர்பான ஆராய்ச்சியில் நாசா ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அதுகுறித்த ஆராய்ச்சிக்கு இந்தியா வர உள்ளதாகவும் மோசடி நபர் கூறியதாக சொல்லப்படுகிறது. மர்ம நபர் வழங்கிய போலி ஆவணங்களை கொண்டு பொது மக்கள் பலர் பணத்தை வாரி இறைத்ததாக சொல்லப்படுகிறது.
ஏறத்தாழ 6 கோடி ரூபாய் வரை பணம் வசூலான நிலையில், மர்ம நபர் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நூற்றுக்கணக்கான மக்கள் புகார் அளித்துள்ளனர். பொது மக்களின் புகாரை கொண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 108 வகையில் புதுமாப்பிள்ளைக்கு தடபுடல் விருந்து!