ஜார்கண்ட் : இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் மீது காதல் வயப்பட்டு, போலந்தில் இருந்து கடல் கடந்து தன் மகளுடன் இந்தியா வந்த பெண், காதலனை திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
காதலுக்கு எல்லை இல்லை என சொல்வது உண்டு. அந்த வகையில் ஜார்கண்டில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் குத்ரா கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான முகமது ஷதாப். இவருக்கும் போலந்தை சேர்ந்த 45 பெண்மணி பொலக் பார்பரா என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் கிடைத்து உள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அதன்பின் இருவரும் காதலிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. பொலக் பார்பராவுக்கு ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளார். விவாகரத்து பெற்ற பொலக் பார்பரா, முகமது மீது கொண்ட காதல் மோகத்தால் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் விசா பெற்று இந்தியா வந்து உள்ளார்.
முகமது ஷதாப்பின் சிறிய கிராமத்தில் கடந்த சில தினங்களாக பொலக் பார்பரா தங்கி வந்து உள்ளார். இந்தியாவில் உள்ள வெப்பத்தை தாங்க முடியாத பார்பராவுக்காக வீட்டில் இரண்டு குளிர்சாத பெட்டிகளை வாங்கி முகமது ஷதாப் பொறுத்தி உள்ளார். பொலிக் பார்பராவுக்காக புது கலர் டிவி உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகளை பார்த்து பார்த்து தன் வீட்டில் செய்து உள்ளார் முகமது ஷதாப்.
அதேநேரம் தன் காதலின் வீட்டு வேலைகளை கவனிப்பது, தொழுவத்தில் உள்ள மாடுகளை பேணுவது, சானத்தை அள்ளுவது உள்ளிட்ட பணிகளையும் பொலக் பார்பரா மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டை சேர்ந்த பெண் கிராமத்தில் தங்கி இருப்பது குறித்து தகவல் அறிந்து போலீசார் விசாரித்ததில் இந்த கடல் கடந்த காதல் கதை வெளியே தெரியவந்து உள்ளது. முகமது ஷதாப்புக்காக விசா பதிவு செய்து உள்ளதாகவும் விசா கிடைத்ததும் தனது 6 வயது மகளுடன் சேர்த்து ஷதாப்பையும் போலந்து அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் பொலக் பார்பரா தெரிவித்து உள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான காதலனை திருமணம் செய்து மீண்டும் சொந்த நாட்டுக்கே அழைத்துச் செல்ல போலந்தில் இருந்து பெண் மணி ஒருவர் இந்தியாவுக்கு, அதுவும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்திற்கு வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Siachen Glacier: இந்திய ராணுவ முகாமில் தீ விபத்து... ராணுவ அதிகாரி பலி?