மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மீன் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நேற்றிரவு (ஏப். 17) விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பணிபுரிந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் உயிருக்கு போராடி வரும் நிலையில், பல பேர் இதனால் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் உமர் ஃபரூக், நிசாமுதீன் சாப், சமீரூல்லா, இஸ்லாம் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, விஷ வாயு தாக்கியதில் பாதிப்படைந்தவர்கள் மங்களூரூ நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு தொழிற்சாலையில் உள்ள கழிவு மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் அதில் இறங்கியுள்ளனர்.
அந்த நேரத்தில் விஷ வாயு தாக்கியதில் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும அவர்களை மீட்க சென்றவர்களும் இதில் பாதிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜஹாங்கீர்புரி வன்முறை; 14 பேர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்!