புதுச்சேரியில் செய்தியாளர்களைச்சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர்களுக்கு அரசு முடிவுகளில் தலையிட அதிகாரம் இல்லை என்றும், ஆளுநர், துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம் என்றார். அதை பொதுவெளியில் பேசுவது அழகல்ல என்றும் கூறினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோர் இதைத்தொடர்ந்து செய்து வருவதாகத் தெரிவித்தார். மக்களால் தேர்வான அரசுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று தான் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளதாகக் கூறிய நாராயணசாமி; அதை தமிழ்நாடு மற்றும், புதுச்சேரி ஆளுநர்கள் கேட்க மறுப்பதாகத் தெரிவித்தார்.
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் மக்கள் குறை கேட்கும் நிகழ்வு குறித்த தேதியை அறிவித்தால் அதை நேரில் பார்த்து உறுதி செய்ய விரும்புவதாகவும், சவாலை ஏற்று தமிழிசை சவுந்தரராஜன் தேதியை அறிவிப்பாரா எனவும் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசின் விஷயங்களில் மூக்கை நுழைப்பேன் என தமிழிசை சவுந்தரராஜன் பேசுவது முறையல்ல என்றும், அரசியல் செய்ய விரும்பினால், பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்யலாம் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் நடைபெறும் இரட்டை ஆட்சியில் முதலமைச்சராக ரங்கசாமி இருந்தாலும் அவர் போட்டுள்ள சட்டை பாஜகவுக்குச் சொந்தம் என்றும், அவர் பாஜகவுக்கு அடிமையாகிவிட்டாதாகவும் நாராயணசாமி குறிப்பிட்டார். மதுபான ஆலைகள் புதிதாக அமைய பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ள சூழலில் 90 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி வாய் திறப்பாரா? எனவும் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆணாக மாறி மாணவியை மணந்த ஆசிரியை.. இப்படியும் ஒரு காதலா?