இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுநரின் சட்டப்பேரவை உரையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது, மருத்துவப்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது, சரக்கு மற்றும் சேவை வரியில் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றது, கரோனா காலத்திலும் ரூ.60,674 கோடி முதலீட்டை ஈர்த்தது, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கியது என தமிழக அரசை பாராட்டும் அறிவிப்புகள் தான் ஆளுநர் உரை முழுவதும் நிரம்பியிருக்கின்றன.
ஆனால், முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும், அம்மையத்தை 1100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் தெரிவிக்கும் குறைகள் அனைத்தும் களையப்படும் என்ற ஒற்றை அறிவிப்பைத் தவிர வேறு புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, பொதுமக்கள் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் குறைகளை தெரிவிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசும் போதாவது, மக்கள் எதிர்பார்க்கும் நலத் திட்டங்களை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காவிரி காப்பாளன் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் முதலமைச்சர் - ஆளுநர் புகழாரம்!