டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு செல்கிறார். இதன் அடிப்படையில், வருகிற 20ஆம் அமெரிக்காவுக்கு புறப்படும் அவர், 25ஆம் தேதி வரை இரு நாடுகளிலும் பயணம் மேற்கொள்வார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 21ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபை வளாகத்தில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, வருகிற 22ஆம் தேதி வாஷிங்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அப்போது, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையடுத்து, வரும் 22ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். பிறகு அன்று மாலை அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் வழங்கும் அரச விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, வருகிற 23ஆம் தேதி, பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் மதிய விருந்து வழங்க உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், வாஷிங்டனில் பிரதமர் மோடி முன்னணி தொழில் நிறுவன வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாட இருக்கிறார். இதனையடுத்து, பிரதமர் மோடி வருகிற 24ஆம் தேதி அரசு முறைப் பயணமாக எகிப்து நாட்டுக்கு செல்கிறார். இதுவே பிரதமர் மோடியின் முதல் எகிப்து பயணம் ஆகும்.
எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்சிசியின் அழைப்பின் பேரில் பிரதமர் எகிப்துக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் பிரதமர் மோடி 2வது முறையாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். இதன் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுவார். முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார்.
இதையும் படிங்க: "ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவை தோற்கடிக்க போகிறது" - ராகுல்காந்தி விமர்சனம்