கரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று மட்டும் நாட்டின் கரோனா மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தைத் தொட்டது. அதில், தமிழ்நாட்டில் பாதிப்பின் எண்ணிக்கை சுமார் நான்காயிரமாக இருந்தது.
கரோனா இரண்டாம் அலை உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு கட்டியம் கூறும்விதமாக தொற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது.
நாட்டில் உச்சபட்சமாக மகாராஷ்டிரா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதார வல்லுநர்கள், உயர் அலுவலர்களுடன் பிரதமர் மோடி கரோனா பரவலைத் தடுப்பது குறித்து தீவிர ஆலோசனை செய்தார்.
இக்கூட்டத்தில், தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் நிலைமையைக் கண்காணிக்க உயர்மட்ட அலுவலர்கள் கொண்ட குழுவை அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்களுடன் இன்று காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
அதில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது, தேவையான இடங்களில் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.