கெய்ரோ: பிரதமர் மோடி தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு, அடுத்ததாக எகிப்து நாட்டுக்கு சென்றார். எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியின் அழைப்பின் பேரில் முதல் முறையாக பிரதமர் மோடி எகிப்து சென்றார். நேற்று(ஜூன் 24) எகிப்து தலைநகர் கெய்ரோ சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். கடந்த 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து நாட்டுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
பயணத்தின் முதல் நாளான நேற்று எகிப்து பிரதமர் முஸ்தபா மட்புலி மற்றும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கெய்ரோவில் உள்ள இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று(ஜூன் 25) எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். அங்கு, முதல் உலகப் போரின்போது எகிப்து நாட்டிற்காக போரிட்டு உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தையும் பார்வையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு கெய்ரோவில் எகிப்து நாட்டின் அதிபர் எல் சிசியை சந்தித்துப் பேசினார். இதில் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் எகிப்து நாட்டின் அதிபர் எல் சிசி இருவரும் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். பிறகு, எகிப்து அதிபர் எல் சிசி, எகிப்து நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்தார். வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 13வது உயரிய அரசு விருது இதுவாகும்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி பல நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், அமெரிக்கா, பப்புவா நியூ கினியா, சவுதி அரேபியா, பாலஸ்தீனம், ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்துள்ளன.
இதையும் படிங்க: எகிப்து சென்றார் பிரதமர் மோடி! இந்திய வீரர்களின் கல்லறையில் அஞ்சலி!