டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 18) தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர், பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பிரதமர்,"இது ஒரு முக்கியமான காலகட்டம். நாடு சுதந்திரம் பெற்று 75ஆம் ஆண்டை கொண்டாடும் காலகட்டம். இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி எவ்வளவு முக்கியமானதோ, அதேபோன்று அடுத்துவரும் 25 ஆண்டுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
நம் நாட்டின் வருங்கால திட்டம் குறித்தும், புதிய உயரங்களை அடைய செய்ய வேண்டியவை குறித்தும் சிந்திக்க இதுவே சரியான நேரம். நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக திறந்த மனதுடன் உரையாட வேண்டும். தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாம். இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த கூட்டத்தொடர் முக்கியமான என்பதற்கு மற்றொரு காரணம், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோர் தேர்வுசெய்ப்பட உள்ளது. குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் வருங்காலத்தில் நம் நாட்டை வழிநாட்டை வழிநடத்துவார்கள்" என்றார்.
இந்த கூட்டத்தொடரில் 24 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில், குடும்ப நீதிமன்ற (திருத்தம்) மசோதா, காடுகள் பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, பத்திரிகை மற்றும் வார இதழ்கள் மசோதா ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.
மேலும், அக்னிபத் திட்டம், விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Presidential Polls: மோடி, ஸ்டாலின் வாக்களித்தனர் - சக்கர நாற்காலியில் வந்த மன்மோகன் சிங்